புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 May 2021 12:09 PM GMT (Updated: 4 May 2021 12:09 PM GMT)

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. 

இதையடுத்து தமிழகத்தில் வரும் 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மக்களின் நன்மைக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அதனை மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கொரோனா 2வது அலை, முதல் அலையை விட மிக மோசமானதாக இருக்கிறது என்றும் தொற்று பரவல் முதல் அலையை விட மிகவும் கூடுதலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர் வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த சூழலில் அதிகப்படியான எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என தெரிவித்துள்ள அவர், நோய் பரவல் தடுப்பு மற்றும் நோய் தொற்றுக்கு ஆளானவர்களை காப்பாற்றுவது ஆகிய இரண்டு முக்கிய நடவடிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்படும் என்றும் அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story