சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை


சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 4 May 2021 3:50 PM GMT (Updated: 4 May 2021 3:50 PM GMT)

சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் 125 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களால், தமிழக சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

ஏற்கனவே கடந்த 2 ஆம் தேதி, திமுகவின் வெற்றி உறுதியான பிறகு அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கும் ஸ்டாலின், இன்று மீண்டும் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.

Next Story