பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயிலில் சோலார் தகடு பொருத்தி சோதனை ஓட்டம்


பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயிலில் சோலார் தகடு பொருத்தி சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 4 May 2021 6:30 PM GMT (Updated: 4 May 2021 5:34 PM GMT)

பழனி முருகன் கோவில் 1-வது மின்இழுவை ரெயிலில், சோலார் தகடு பொருத்தி சோதனை ஓட்டம் நடந்தது.

பழனி,

முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகின்றன. இதில், மேற்கு கிரிவீதியில் உள்ள மின்இழுவை ரெயில்நிலையத்தில் இருந்து 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அடிவாரத்தில் இருந்து, 8 நிமிடம் பயணம் செய்தால் மலைக்கோவிலை சென்றடையலாம். இயற்கை அழகை ரசித்தபடி இந்த ரெயில் மூலம் பக்தர்கள், மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

ரெயில் பெட்டிகளின் உட்பகுதியில் மின்விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் முருக பக்தி பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும். மேலும் இரவில் ஜொலிக்கும் வகையில் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பழனி முருகன் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆனால் ஆகம விதிப்படி மட்டுமே பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவில் அலுவலர்கள், குருக்கள்கள் கலந்துகொள்ளும் வகையில் மின்இழுவை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த பக்தர் ஒருவர், பழனி முருகன் கோவிலுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சோலார் மின்தகட்டை வழங்கினார். தற்போது அந்த சோலார் மின்தகடு 1-வது மின்இழுவை ரெயிலின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு ரெயில் பெட்டிகளின் உட்பகுதியில் உள்ள மின்விளக்குகள், மின்விசிறிகள், வண்ண விளக்குகள் ஆகியவை இயங்கும் வகையில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

Next Story