அம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி


அம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 4 May 2021 9:07 PM GMT (Updated: 4 May 2021 9:07 PM GMT)

அம்மா உணவகத்தை சூறையாடிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’, என்று மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், ஜெயலலிதா உருவப்படங்கள் ஆகியவற்றை தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

அம்மா உணவகத்தில் இருந்த உணவுகளையும், கீழே தள்ளி நாசப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாக பரவியது.

ஏழை-எளியோர் சாப்பிட்டு வந்த அம்மா உணவகத்தில் தி.மு.க.வினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பியது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. 92-வது வட்டத்தை சேர்ந்த நவசுந்தர், சுரேந்திரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

இதற்கிடையில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்மா உணவகத்தில் தி.மு.க.வை சேர்ந்த இருவர் பிளக்ஸ் பேனரை அகற்றி கீழே சாய்த்தனர். இதையடுத்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அந்த பிளக்ஸ் அங்கேயே மீண்டும் ஒட்டப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் அந்த உணவகம் அமைந்திருக்கும் பகுதி போலீசாரிடம், தி.மு.க. பகுதி செயலாளர் மூலம் புகார் மனு தரப்பட்டு இருக்கிறது. இந்த பெயர் பலகைகளை பிரித்தெடுப்பதற்கு காரணமான நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய 2 பேர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று போலீசாரிடம் எடுத்து சொல்லி, அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். அந்த 2 பேர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 294-பி 420-7, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கட்சியில் இருந்து நீக்கம்

அந்த 2 பேரும் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த 2 பேரும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்தநிலையில் ஒரு சில கட்சிகளை சேர்ந்தவர்கள் ‘தி.மு.க.வினர் அராஜகத்தை தொடங்கிவிட்டார்கள்’ என்று தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போதே, ‘‘எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் ஏன் இவர்களுக்கு வாக்களிக்க தவறிவிட்டோம்... என்று மனம் வருந்துகிற வகையிலும் எங்கள் ஆட்சி அமையும்’’, என்று கூறியிருந்தார்.

உதாரணம்

அதன் அடிப்படையில் தான் இந்த தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும், சொந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, பிரித்தெடுத்த பிளக்சை அதே இடத்தில் ஒட்டியது போன்ற தீவிர நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார். இதுவே தி.மு.க. ஆட்சி தொடங்குவதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் எந்த வகையில் இந்த ஆட்சியை நடத்தி செல்ல இருக்கிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமதாஸ் கண்டனம்

அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் சூறையாடிய விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- “சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை தி.மு.க.வினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக்கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.”

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story