வேலைபார்த்த மருந்தகத்தில் கைவரிசை காட்டி கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்' மருந்தை ரூ.36 ஆயிரத்துக்கு விற்ற ஊழியர் கைது


வேலைபார்த்த மருந்தகத்தில் கைவரிசை காட்டி கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர் மருந்தை ரூ.36 ஆயிரத்துக்கு விற்ற ஊழியர் கைது
x

வேலைபார்த்த மருந்தகத்தில் திருடி கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை ரூ.36 ஆயிரத்துக்கு விற்ற ஊழியரும், வாங்கிய நபரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ‘ரெமிடெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

‘ரெமிடெசிவிர்’ மருந்து சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறதா என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேமரா காட்டிக்கொடுத்தது

இந்தநிலையில் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மருந்தகத்தின் மானேஜர் பாஸ்கர், மருந்தகத்தில் வைத்திருந்த 6 ‘ரெம்டெசிவிர்’ மருந்து பாட்டில்களை காணவில்லை என்று வேப்பேரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருந்தகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மருந்தகத்தின் ஊழியரான ஓட்டேரி பிரிக்ளின் சாலையைச் சேர்ந்த ஜெயசூர்யா (23) அதை திருடியது தெரியவந்தது.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர், திருடிய ‘ரெம்டெசிவிர்’ மருந்தை ரூ.36 ஆயிரத்துக்கு சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரியின் மேற்பார்வையாளர் ஸ்டாலின் தாமசிடம் (42) விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து மருந்தை வாங்கிய ஸ்டாலின் தாமசும் கைது செய்யப்பட்டார்.

12 மருந்து பாட்டில்கள் பறிமுதல்

சென்னை சூளைமேடு பகுதியில் சட்டவிரோதமாக ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்த தனியார் மருந்து விற்பனை பிரதிநிதியான கொருக்குப்பேட்டை மண்ணப்பன் தெருவைச் சேர்ந்த கணேஷ் (27) என்பவரை சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, வேப்பேரி போலீசில் ஒப்படைத்தனர்.

அவரிடம் இருந்து 12 ‘ரெம்டெசிவிர்’ மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story