'டாஸ்மாக்' கடைகள் இன்று முதல் காலை 8 மணிக்கு திறப்பு மதியம் 12 மணி வரை மட்டுமே மது விற்பனை


டாஸ்மாக் கடைகள் இன்று முதல் காலை 8 மணிக்கு திறப்பு மதியம் 12 மணி வரை மட்டுமே மது விற்பனை
x
தினத்தந்தி 5 May 2021 7:50 PM GMT (Updated: 5 May 2021 7:50 PM GMT)

'டாஸ்மாக்' கடைகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மது விற்பனை நடைபெற உள்ளது.

சென்னை, 

தற்போது கொரோனா 2-வது அலையின் வேகத்தை குறைக்கும் நடவடிக்கையாக இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள், டீ கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மதுபிரியர்கள் மத்தியில் ‘டாஸ்மாக்’ கடைகள் மீண்டும் மூடப்பட்டு விடுமோ? என்ற கவலை இருந்து வந்தது.

இந்தநிலையில் காய்கறி, மளிகை கடைகள் போன்று ‘டாஸ்மாக்’ கடைகளுக்கும் மதியம் 12 மணி வரை நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று அரசாணை வெளியிட்டார்.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை

இதைத்தொடர்ந்து ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 20-ந்தேதி வரையில் ‘டாஸ்மாக்’ கடைகளை காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளிலும் மது விற்பனை நடைபெற வேண்டும்.

மறு உத்தரவு வரும் வரையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ‘டாஸ்மாக்’ கடைகள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story