மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 5 May 2021 10:59 PM GMT (Updated: 5 May 2021 10:59 PM GMT)

நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளையே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்களுக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். தந்தையின் கொடுமை தாங்க முடியாத சிறுமியின் தாயார் குழந்தைகளை விட்டு விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அந்த சிறுமியை பெற்ற மகள் என்று கூட பாராமல் அவளது தந்தை, தனது நண்பர்களான கோபி அருகே உள்ள கூகலூர் குளத்துக்கடை கக்கன் வீதியை சேர்ந்த அம்மாசை மகன் அருணாச்சலம் (வயது 35), குளத்துக்கடை கருப்பன் வீதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (33) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து உள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

60 ஆண்டு ஜெயில்

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தது, கூட்டு பலாத்காரம் செய்தது ஆகிய குற்றங்களுக்காக குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் மற்றும் கற்பழிப்பு குற்றம் உள்பட 3 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டுகள் தந்தைக்கு ஜெயில் தண்டனை விதித்தார்.

அருணாச்சலத்துக்கு போக்சோ உள்ளிட்ட 2 சட்டங்களின் கீழ் தலா 20 ஆண்டு வீதம் 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், மணிகண்டனுக்கு போக்சோ உள்பட 2 சட்டங்களின் கீழ் தலா 20 ஆண்டுகள் வீதம் 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story