எப்படியாவது வாங்கிட வேண்டும் என ஆவல் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க கூலிக்கு ஆள் வைத்து வரிசையில் இடம் பிடிக்கும் அவலம்


எப்படியாவது வாங்கிட வேண்டும் என ஆவல் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க கூலிக்கு ஆள் வைத்து வரிசையில் இடம் பிடிக்கும் அவலம்
x
தினத்தந்தி 5 May 2021 11:13 PM GMT (Updated: 5 May 2021 11:13 PM GMT)

‘ரெம்டெசிவிர்’ மருந்து எப்படியாவது வாங்க வேண்டும் என கூலிக்கு ஆள் வைத்து வரிசையில் இடம் பிடித்து, வசதி படைத்தோர் மட்டுமே வாங்கி செல்வதால் ஏழை மக்கள் ஆதங்கம் அடைந்து உள்ளனர்.

சென்னை,

கொரோனா பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இன்றைய தேதியில் ஆக்சிஜனும், ‘ரெம்டெசிவிர்’ மருந்தும் தான் முக்கியமான தேவையாக இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில், ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், கள்ளச்சந்தை மூலம் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.1,568-க்கு வாங்கக்கூடிய ஒரு ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

ஒரு நோயாளிக்கு 6 ‘ரெம்டெசிவிர்’ குப்பிகள் வழங்கப்படும். இந்த 6 குப்பிகளும் ரூ.9,500-க்கு அரசு மருந்தகத்தில் வாங்கி செல்லலாம். ஆனால் கள்ளச்சந்தையில் ஒரு ரெம்டெசிவிர் குப்பி மட்டுமே ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுப்பதற்காக தான், தமிழக அரசு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைத்து வினியோகித்து வருகிறது.

இரவு-பகலாக...

இந்த ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்க தினசரி ஆயிரகணக்கானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி முன்பு குவிந்து வருகின்றனர். எப்படியாவது மருந்து வாங்கி விட வேண்டும் என்று, வரிசையில் நிற்பதற்கு சமூக இடைவெளியின்றி ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வருவதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், அங்கு காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறுகிறது.

மேலும், சாலையில் ஒரே நேரத்தில் அனைவரும் கூடுவதால், கடந்த சில நாட்களாகவே பர்னபி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக இரவு-பகலாக மருத்துவ கல்லூரி முன்பு பிளாட்பாரத்திலே தங்கி, பலர் வாங்கி செல்கின்றனர்.

கூலிக்கு ஆள் வைத்து

இந்தநிலையில் வசதி படைத்தவர்கள், தங்கள் குடும்பத்தினருக்கு எப்படியாவது மருந்தை வாங்கிவிட வேண்டும் என கூலிக்கு ஆள் வைத்து வரிசையில் இடம் பிடிக்கின்றனர். அவர்களிடம் உரிய ஆவணங்களை கொடுத்தனுப்பி, அவர்கள் மூலம் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை வாங்கி செல்லும் அவல நிலையும் நடந்து வருகிறது. சில இடங்களில் மருந்து வாங்கி தர தனியாக ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் பெறப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே மருந்து விற்பனை செய்வதால் ஏழை, எளிய மக்கள் பல மணி நேரம் கால்கடுக்க நின்றாலும், அவர்களால் மருந்து வாங்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். அதேபோல் பல தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, வரிசையில் இடம் பிடித்து ரெம்டெசிவிர் மருந்து வாங்கி செல்கின்றனர்.

மக்களை அல்லாட விடாமல்...

எனவே இதனை கண்காணித்து, உரிய ஆவணங்களுடன் வரும் நோயாளிகளின் குடும்பத்தினருக்கே ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் 9-வது நாளாக ‘ரெம்டெசிவிர்’ மருந்து நேற்று விற்பனை செய்யப்பட்டது. பலர் நேற்று முன்தினம் இரவில் இருந்தே வரிசையில் இடம் பிடித்து காத்திருந்து நேற்று மருந்தை வாங்கி சென்றனர்.

இதுபோன்று தினமும் மக்கள் அல்லாடும் நிலையில், நிரந்தர தீர்வு காண தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வாரத்துக்கு 59 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பி்கள் வருவதாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வாரத்துக்கு 18 ஆயிரம் குப்பிகளும், அரசு மருத்துவமனையில் வாரத்துக்கு 30 ஆயிரம் குப்பிகளும் தேவையாக இருப்பதாக கூறப்படும் சூழ்நிலையில், மக்களை அல்லாட விடாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும், மருந்துகளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுவரை 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ‘ரெம்டெசிவிர்’ குப்பிகள் ரூ.3 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக மருத்துவ பணிகள் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story