முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ்: ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு நடவடிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2021 8:52 AM GMT (Updated: 6 May 2021 8:52 AM GMT)

அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கடந்த 2018-ஆம் சூரப்பா நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகள் இவர் பதவியில் இருக்கும்போதே தமிழக அரசுக்கும் இவருக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இவர் இருந்த போது சுமார் 250 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சூரப்பா மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரியவந்தது. இதனால் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. இருப்பினும், விசாரணை முடியும் முன்னரே அவர் ஓய்வு பெற்றுவிட்டார். தன்னை பதவி நீக்கம் செய்ய இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்று விட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இது குறித்துக் கடந்த மாதம் நீதிபதி கலையரசன், விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும் சூரப்பா ஓய்வு பெற்றாலும்கூட அவர் எங்குச் சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சூரப்பாவின் விளக்கத்தை பொறுத்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், பதில் திருப்திகரமாக இல்லை என்றால் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது.

Next Story