தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 6 May 2021 5:53 PM GMT (Updated: 6 May 2021 5:53 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆலையில் உள்ள பிரதான குடிநீர் தொட்டிக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மட்டும் தனியாக குடிநீர் குழாய் அமைத்த பிறகே குடிநீர் வினியோகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு நேற்று முன்தினம் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில், பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முன்தினம் இரவில் 50 பணியாளர்களும், நேற்று காலையில் 50 பணியாளர்களும் என மொத்தம் 100 பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக ஆலைக்குள் சென்று உள்ளனர்.

அவர்கள் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மின்சார இணைப்பு கொடுத்து, அதன்மூலம் மோட்டார்கள் சீராக இயங்குகிறதா?, அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்த்து வருகின்றனர். ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், உடனடியாக அதனை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார் நிலையில் உற்பத்தி நிலையம் வந்த பிறகு, ஆலையில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். அதன்பிறகு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் முடிவடைய ஒரு வார காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story