கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 10-வது நாளாக அலைமோதிய கூட்டம்


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 10-வது நாளாக அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 6 May 2021 7:15 PM GMT (Updated: 6 May 2021 7:15 PM GMT)

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 10-வது நாளாக பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்காக ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்து வருவதால், கொரோனா பரவல் அபாயமும், சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு மட்டுமே ‘ரெம்டெசிவிர்’ விற்பனை செய்வதால், மருந்து கிடைக்காத பலரும் மருந்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று, இரவு-பகலாக மருந்துவக்கல்லூரி வாசலிலே தவம் கிடக்கின்றனர்.

இந்தசூழ்நிலையில், கூலிக்கு ஆள் வைத்து ரெம்டெசிவிர் மருந்து வாங்குவது, கமிஷன் பெற்று கொண்டு மருந்து வாங்கி கொடுப்பது, ‘டோக்கனை’ பணத்துக்கு விற்பது போன்ற அவல நிலையும் அங்கு நடக்கிறது.

10-வது நாள் கூட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வினியோகம் செய்வதால், தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னையை நோக்கி பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 10-வது நாளாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடந்தது. நேற்றும் வழக்கமான கூட்டம் காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வினியோகம் செய்தால் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால், வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வினியோகம் செய்து, குறிப்பிட்ட தேதியில் வந்து ‘ரெம்டெசிவிர்’ பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினால், பொதுமக்களின் நேரம் வீணாவது தடுப்பது மட்டுமன்றி, கூட்டத்தையும் குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

Next Story