மாநில செய்திகள்

இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு + "||" + MK Stalin's biography from the beginning of the Youth Forum to becoming First Minister

இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு

இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு
இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு.
இன்று முதல்-அமைச்சராகும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

மாணவ பருவத்தில் அரசியல்

முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், தயாளு அம்மாளுக்கும் 1953-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி 3-வது மகனாக பிறந்தார். ரஷிய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்த பெயரை சூட்டினார் கருணாநிதி. மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா. இந்த தம்பதியர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மாநில கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். தந்தையின் தாக்கத்தால், இளம் வயதிலேயே மு.க.ஸ்டாலினுக்கு நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. இவர் நடித்த முதல் நாடகமான ‘முரசே முழங்கு' வெற்றிவிழா கண்டது. அதைத்தொடர்ந்து ‘திண்டுக்கல் தீர்ப்பு', ‘நீதி தேவன் மயங்குகிறான்', ‘நாளை நமதே' என திராவிட கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இதேபோல, ‘ஒரே இரத்தம்' ,‘மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் `குறிஞ்சி மலர்’ என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது 14-வது வயதிலேயே அரசியல் வாழ்க்கையை தொடங்கிவிட்டார். தி.மு.க. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த 1967 காலகட்டங்களில் பள்ளி மாணவனாக இருந்த மு.க.ஸ்டாலின், தனது நண்பர்களை சேர்த்துக்கொண்டு கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஏற்படுத்தி தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது, சமூகப்பணி செய்வது என மாணவப் பருவத்திலேயே அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1968-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்தார். அதைத்தொடர்ந்து, முதல் கட்சிப் பதவியாக சென்னை 75-வது வட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்

1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு `மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1983-ம் ஆண்டுதி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, ‘முதன்முறையாக மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்' என்ற பெருமையையும் மு.க.ஸ்டாலின் பெற்றார். 2001-ம் ஆண்டு மீண்டும் சென்னை மேயராக போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றிபெற்றார்.

ஆனால் 2002-ல் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தமான, `ஓரே நபர் இரண்டு அரசு பதவிகளில் இருக்க முடியாது’ என்ற காரணத்தால், அதே ஆண்டு, தான் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 2008-ம் ஆண்டு தி.மு.க.வின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

3-வது முறையாக வெற்றி

2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். 2017-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு தி.மு.க. பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் இரண்டு முறையும் வெற்றி பெற்றார். தற்போது 3-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இன்று பொறுப்பு ஏற்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று
ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று.
2. பறக்கும் சீக்கியரின் வாழ்க்கை தரும் பாடம்
‘பறக்கும் சீக்கியர்’ என்று இந்தியாவே போற்றி புகழ்ந்த 91 வயது தடகள வீரர் மில்காசிங், கொடிய கொரோனாவின் நச்சு கரங்கள் தீண்டி மறைந்துவிட்டார்.
3. புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பு ஏற்கவுள்ள புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு.