புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிப்பு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை


புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிப்பு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
x
தினத்தந்தி 6 May 2021 9:22 PM GMT (Updated: 6 May 2021 9:22 PM GMT)

புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி,

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 659 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 359 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவ கல்லூரியில் 100 படுக்கைகளும், கரிக்கலாம்பாக்கம் ஆஸ்பத்திரியில் 25 படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புதுவையில் 1,276 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன.

காரைக்காலில் 50 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவை. ஏனாம், மாகியிலும் தலா 20 படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. புதுவையில் தேவையான உபகரணங்கள், ஆக்சிஜன் வசதி உள்ளது. உள்விளையாட்டு அரங்கங்களிலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளோம். செயல்படாத தனியார் ஆஸ்பத்திரிகளை கையகப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் தேவையான மருந்து, உபகரணங்களை கொடுத்து பணியாற்றி வருகிறோம். தனியார் மருத்துவமனைகளில் ஏற்கனவே அரசு சார்பில் அனுப்பப்படும் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 300 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தும் தட்டுப்பாடு இல்லை.

இந்த நேரத்தில் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் தொற்று கட்டுப்பாடற்று பரவும். ஒரு நாளைக்கு தொற்றினால் 1,500 பேர் பாதிக்கப்பட்டால் அதில் அதிகம் பேர் இளைஞர்களாக உள்ளனர். அதாவது 60 சதவீதம் பேர் இளைஞர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் பாதிக்கப்படுபவர்களில் 60 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். எனவே தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தற்போது யாருக்கு கொரோனா உள்ளது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சோர்ந்துபோய் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். எனவே அவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

328 ஆ‌ஷா பணியாளர்கள், 519 வார்டு அட்டண்டர்கள், 323 சானிட்டரி தொழிலாளர்கள், 173 ஏ.என்.எம்.கள், 173 மருந்தாளுனர்கள், 1,140 நர்சுகள், 181 டாக்டர்கள், 11 அதிகாரிகள் இந்த ஊக்கத்தொகையை பெறுகிறார்கள்.

தொகை சிறியது தான் என்றாலும் அவர்களை நாம் இந்த நேரத்தில் பாராட்டியாக வேண்டும். முதல்-அமைச்சர் பதவியேற்பு விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story