மளிகை, காய்கறி கடைகள் மதியம் வரை மட்டுமே இயங்கின தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன


மளிகை, காய்கறி கடைகள் மதியம் வரை மட்டுமே இயங்கின தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
x
தினத்தந்தி 7 May 2021 12:07 AM GMT (Updated: 7 May 2021 12:07 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நேர புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதனால் பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. எனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 6-ந்தேதி (நேற்று) முதல் 20-ந்தேதி வரையிலான 15 நாட்கள் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் ஊரடங்கு நேர புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள்

இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் டீக்கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே பகல் 12 மணி வரை இயங்கின. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் பெரும்பாலான வணிகப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் தமிழகம் முழுவதும் பகல் 12 மணிக்கு பிறகு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டன. அதிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உணவகங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடித்து உணவு வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால், தமிழகம் முழுவதும் நேற்று பிற்பகல் முதல் மினி ஊரடங்கு போன்ற சூழ்நிலையே நிலவியது.

கடைகள் அடைப்பு

சென்னையிலும் நேற்று பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடியது. அதேவேளை உணவகங்கள் மட்டுமே செயல்பட்டன.

இதுதவிர ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டதின் விளைவாக தியேட்டர்கள், ஜிம்கள், சலூன்கள், அழகு சாதன நிலையங்கள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பாலகங்கள் வழக்கம்போல இயங்கின. அந்தவகையில் ஆவின் பாலகங்கள் நேற்று வழக்கம் போலவே செயல்பட்டன.

வழக்கமான வாகன போக்குவரத்து

அதேபோல மாநகர பஸ்களின் போக்குவரத்து சேவைகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதனால் 50 சதவீத பயணிகளுடனே மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் 50 சதவீத பயணிகளுடனேயே இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் குறைவான அளவிலான பயணிகளுடனேயே புறப்பட்டன.

கடைகள் அடைக்கப்பட்டாலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பதால் நேற்று சென்னை நகர சாலைகளில் வழக்கமான வாகன நெரிசல் இருந்தது.

போலீசார் கண்காணிப்பு

சென்னை நகரில் சாலையோர உணவகங்களும், தள்ளுவண்டிகளும் அதிகம். இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிரொலியாக நேற்று தள்ளுவண்டி கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. சில கடைகளில் சமூக இடைவெளி கடைபிடித்து மக்கள் சாப்பிட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.

அந்தவகையில் சென்னையில் நேற்று ஊரடங்கு நேர புதிய கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டன. போலீசாரும் வாகனங்களில் நகர் முழுவதும் சுற்றி வந்து கடைகள் மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர். அதேவேளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் 12 மணி தாண்டியும் செயல்பட்ட சில கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story