மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் இன்று பதவி ஏற்பு தமிழக அமைச்சர்கள் பட்டியல் இலாகா விவரம் வெளியானது


மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் இன்று பதவி ஏற்பு தமிழக அமைச்சர்கள் பட்டியல் இலாகா விவரம் வெளியானது
x
தினத்தந்தி 7 May 2021 12:15 AM GMT (Updated: 7 May 2021 12:15 AM GMT)

மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. அமைச்சர்கள் இலாகா விவரம் வெளியானது.

சென்னை, 

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இன்று பதவி ஏற்பு

சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.

பட்டியல் வெளியீடு

இதுகுறித்து கவர்னர் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின், தனது தலைமையில் அமையும் அமைச்சரவையில் நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை அவர்களின் விவரங்களுடன் 6-ந்தேதி அளித்தார்.

அவரது பரிந்துரையை கவர்னர் அங்கீகரித்துள்ளார். அந்த பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசுத்துறைகளின் விவரம் வருமாறு:-

முதல்-அமைச்சர்

மு.க.ஸ்டாலின் - முதல்-அமைச்சர் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்.

துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்.

இ.பெரியசாமி - கூட்டுறவுத் துறை அமைச்சர் - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.

உயர் கல்வித்துறை

க.பொன்முடி - உயர் கல்வித்துறை அமைச்சர் - உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்- பொதுப்பணிகள், (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்).

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை.

தொழில் துறை

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர் - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்.

எஸ்.ரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்.

சு.முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர் - வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்.

தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில்துறை அமைச்சர் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

செய்தித்துறை

மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை, அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

பி.கீதா ஜீவன் - சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு.

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை அமைச்சர் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்.

கா.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர் - வனம்.

உணவு, மின்சாரம்

அர.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.

வி.செந்தில்பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்).

ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் - கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.

மக்கள் நல்வாழ்வு

மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.

பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்- வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைப்கள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நலன்.

பி.கே.சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.

நிதித்துறை

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை - நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்.

சா.மு.நாசர் - பால்வளத் துறை அமைச்சர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு வாரியம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி.

சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

ஆதிதிராவிடர் நலன்

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.

த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தகவல் தொழில்நுட்பத் துறை.

மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.

என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் - ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story