ஸ்டெர்லைட்டுக்கு ஒத்துழைக்கும் மத்திய அரசு பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்காதது ஏன்? மதுரை ஐகோர்ட்டு எழுப்பிய அதிரடி கேள்விகள்


ஸ்டெர்லைட்டுக்கு ஒத்துழைக்கும் மத்திய அரசு பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்காதது ஏன்? மதுரை ஐகோர்ட்டு எழுப்பிய அதிரடி கேள்விகள்
x
தினத்தந்தி 7 May 2021 10:23 PM GMT (Updated: 7 May 2021 10:23 PM GMT)

ஸ்டெர்லைட்டுக்கு ஒத்துழைக்கும் மத்திய அரசு திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வராதது ஏன்? தனியாருக்கு பெரும் தொகை கொடுப்பதைவிட தடுப்பூசிகளை அரசே தயாரிக்கலாமே? என்பன உள்ளிட்ட அதிரடி கேள்விகளை மதுரை ஐகோர்ட்டு எழுப்பியுள்ளது.

மதுரை, 

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய 3 ஆலைகள் செயல்பட்டு வந்தன. இவை ஒரு மணி நேரத்திற்கு 140 டன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டவை. ஆனால் அங்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு, அப்பகுதி செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் 2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை இந்தியாவில் தீவிரமாக இருக்கிறது.

இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கவும், செங்கல்பட்டு எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:-

1. திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள 3 கலன்களில் 140 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா.?

2. பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க கோரி திருச்சி தொகுதி எம்.பி. சிவா எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

3. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய சூழலில் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வராதது ஏன்?

4. மத்திய அரசுக்கு சொந்தமாக தடுப்பூசிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் எத்தனை உள்ளன?

5. அவற்றின் தற்போதைய நிலை என்ன?

6. தடுப்பூசி தயாரிக்க கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?

7.மத்திய அரசு தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் தொகையை கொடுக்கக்கூடிய சூழலில் அரசே ஏன் தடுப்பூசிகள் தயாரிக்கக்கூடாது?

மேற்கண்ட அதிரடி கேள்விகளுக்கு விரிவான பதில்களை மத்திய அரசு தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story