அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும்


அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 May 2021 10:54 PM GMT (Updated: 7 May 2021 10:54 PM GMT)

அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்குமாறு அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அதிகாரம் இல்லை

அ.தி.மு.க. கட்சி விதியின்படி, பொதுச்செயலாளரை கட்சி உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த விதியைத் திருத்த முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டபிறகு, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, பொதுச்செயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இப்பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

உள்கட்சித் தேர்தல்

பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கும், மக்கள் பிரதிநித்துவ சட்டத்துக்கும் முரணானது. கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கும் இரட்டைத் தலைமையை கட்சி உறுப்பினர்கள் யாரும் விரும்பவில்லை. மேலும், 2014-ம் ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட உள்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால், உள்கட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க.வுக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு அளித்தேன்.

தேர்தல் நடத்துவதாக உறுதி

அந்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்தனர். அவ்வாறு உறுதி அளித்து ஓராண்டுக்கு மேலாகியும், இன்னும் உள்கட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, கட்சியின் விதிகளுக்கு முரணாக உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி அ.தி.மு.க. செயல்படத் தடை விதிக்க வேண்டும். பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும். கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பதில் அளிக்கவேண்டும்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு வருகிற ஜூலை 7-ந்தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு உத்தரவிட்டார்.



Next Story