முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நந்தம்பாக்கத்தில் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு


முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நந்தம்பாக்கத்தில் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 7 May 2021 10:58 PM GMT (Updated: 7 May 2021 10:58 PM GMT)

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நந்தம்பாக்கத்தில் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

சென்னை, 

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நேற்று மாலை முதல் முறையாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வரும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தை பார்வையிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகரப் பகுதியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கூடுதலாக அமைத்திடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இன்று (நேற்று) நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வரும் கோவிட் பராமரிப்பு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஆக்சிஜன் சேமிப்பு நிலையம்

இம்மையத்தில் முதற்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வரும் 300 படுக்கைகள் 10-ந் தேதி முதல் செயல்படும். அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்தும், அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்தும், இம்மையத்திற்கான மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இம்மையத்திற்கான உணவு மற்றும் பராமரிப்பு பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும்.

இந்த நிகழ்வின்போது, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரகத்தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரித் துறை ஆணையர்-முதன்மைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கோவிட்-19 கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக், ஆணையர் கோ.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story