30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம்,தாராபுரம் தொகுதிகளுக்கு அமைச்சர் அந்தஸ்து


30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம்,தாராபுரம் தொகுதிகளுக்கு அமைச்சர் அந்தஸ்து
x
தினத்தந்தி 7 May 2021 11:45 PM GMT (Updated: 7 May 2021 11:45 PM GMT)

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் காங்கேயம்,தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

காங்கேயம், 

தி.மு.க. அமைச்சர்கள் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியானது. இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படதொழில்நுட்பவியல், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், அப்போது இருந்த வெள்ளகோவில் தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். இது வரை காங்கேயம் தொகுதியில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில்லை. அதேபோல அ.தி.மு.க. விலும், காங்கேயம் தொகுதியைச்சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

கடந்த 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காங்கேயம் மற்றும் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதியை சாராத ஆர்.எம்.வீரப்பன் காங்கேயத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காங்கேயம் தொகுதியைச் சேர்ந்த மு.பெ.சாமிநாதன் அமைச்சராக அறிவிக்கப்பட்டது தொகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அ.தி.மு.க வேட்பாளா் ஈஸ்வரமூா்த்தி வெற்றி பெற்றாா். அப்போது அவருக்கு கதர் மற்றும் கிராம கைத்தறி தொழில் அமைச்சா் பதவியும் வழங்கப்பட்டது. அவரை தொடா்ந்து 1996-ம் ஆண்டு தி.மு.க.வின் சரஸ்வதியும், 2001-ம் ஆண்டு பா.ம.க வின் சிவகாமியும், 2006-ம் ஆண்டில் தி.மு.க.வின் பிரபாவதியும் வெற்றி பெற்றனா். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு தோ்தலில் அ.தி.மு.க.சார்பில் பொன்னுசாமி வெற்றி பெற்று தொகுதியை மீண்டும் அ.தி.மு.க வசமாக்கினாா். தொடா்ந்து 2016-ம் ஆண்டு தோ்தலில் தி.மு.க கூட்டணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் காளிமுத்து வெற்றி பெற்றாா். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தோ்தலில் அ.தி.மு.க கூட்டணி சாா்பில் பா.ஜனதா மாநில தலைவா் எல்.முருகன் போட்டியிட்டாா். அவருக்கு எதிராக தி.மு.க வேட்பாளா் கயல்விழி செல்வராஜ் களமிறக்கப்பட்டாா்.

முடிவில் தி.மு.க வேட்பாளா் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றாா். அதோடு நின்று விடாமல் தி.மு.க அரசின் அமைச்சரவையிலும், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ஆனாா்.

இதனை தி.மு.கவினா் மட்டும் இன்றி தாராபுரம் தொகுதியை சோ்ந்த பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனா். ஏனென்றால் கடந்த 30 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தாராபுரம் அமைச்சா் தொகுதி ஆகியுள்ளது.

Next Story