சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது


சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2021 12:07 AM GMT (Updated: 8 May 2021 12:07 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக ரூ.100 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய 113 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு வந்த தன்சானியா நாட்டைச்சேர்ந்த டிபோரா இளையா (வயது 46) மற்றும் அவருடன் வந்த பெண் பயணி பிலீக்ஸ் ஒபடியா (45) ஆகிய இருவா் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.100 கோடி போதை பொருள்

அதில், தென்ஆப்ரிக்காவில் இருந்து டிபோரா இளையா பெங்களூருவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்து உள்ளதாகவும், அவருக்கு உதவியாக பிலீக்ஸ் ஒபடியா உடன் வந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பெங்களூருக்கு செல்ல நேரிடையாக டிக்கெட் கிடைக்காததால் சென்னை வந்து உள்நாட்டு முனையத்தில் இருந்து இருவரும் பெங்களூரு செல்ல இருந்தனர். அவர்களிடம் இருந்த டிராலி சூட்கேஸ்களை சந்தேகத்தின்பேரில் அதி காரிகள் சோதனை செய்தனா்.

அதில் சூட்கேசின் அடிப்பகுதியில் உள்ள ரகசிய அறைக்குள் பாக்கெட்டுகளில் ஹெராயின் போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். 2 பேரிடம் இருந்தும் ரூ.100 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ ஹெராயின் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து தன்சானியா நாட்டைச்சேர்ந்த பெண் உள்பட 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருவரும் சா்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சோ்ந்தவா்கள் என்றும் தெரியவந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கைதான இருவரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

Next Story