சர்வதேச அன்னையர் தினம்: மறக்காமல் இன்று அன்னையருக்கு வாழ்த்து சொல்லுங்கள் விலை மதிக்க முடியாத வாழ்த்தை பெறுங்கள்


சர்வதேச அன்னையர் தினம்: மறக்காமல் இன்று அன்னையருக்கு வாழ்த்து சொல்லுங்கள் விலை மதிக்க முடியாத வாழ்த்தை பெறுங்கள்
x
தினத்தந்தி 9 May 2021 1:04 AM GMT (Updated: 9 May 2021 1:04 AM GMT)

சர்வதேச அன்னையர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைவரும் தம்முடைய தாய்க்கு வாழ்த்தை கூறி விலை மதிக்க முடியாத வாழ்த்தை பெறலாம்.

 சென்னை, 

அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடியவர் தான் தாய். பிள்ளைகளின் மீது தாய் வைத்திருக்கும் அன்பை அளவிடவே முடியாது. அந்த அன்பு மிகவும் தூய்மையானது.

எப்போதுமே தமது குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்பை தாய் வைத்திருப்பாள். தம் பிள்ளைகளுக்கும், குடும்பங்களுக்கும் அள்ளித் தரும் அன்பை அளவிடவோ, மதிப்படவோ முடியாது. எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். இந்த ஒப்பற்ற பங்களிப்பை மற்றும் அவர்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை

பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் 1908-ம் ஆண்டு மேற்கு வெர்ஜீனியாவில் உள்ள தூய ஆண்ட்ரு மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் முதன் முதலாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இது அங்குள்ள அன்னா ஜாவிஸ் என்பவரின் முயற்சியால் நடந்தது.

அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் நாட்டினையே 'தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், மாதா, பிதா, குரு, தெய்வம்' என்றும் 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என்ற முதுமொழிக்கு ஏற்ப கூறி தாயை பெருமைப்படுத்தி உள்ளனர். அன்னையின் சிறப்பை எடுத்துக் கூறவும், தாயை கொண்டாடுவதற்கு ஒரு நாள் மட்டும் போதாது.

விலை மதிப்பு மிக்க வாழ்த்து

‘ஒரு குழந்தைக்கு அதனுடைய தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இந்த உலகில் கிடையாது. தாயின் அன்பு சட்டத்தை அறியாது, பரிதாபத்தை அறியாது. அந்த தாயின் அன்பு பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை அடித்து நொறுக்கி அதன் அன்பு வழியில் தொடர்ந்து செல்லும்' என்று தாயின் அன்பைப் பற்றி பிரபல எழுத்தாளர் அசுதா கிறிஸ்டி கூறுகிறார்.

அதனைப் போன்று ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் சர்வதேச அன்னையர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்களுடைய தாய்க்கு பரிசு பொருட்களை வாங்கி தந்து கடமைக்கு வாழ்த்துக்கள் கூறுவதைவிட்டு விட்டு, தாயிடம் தொடர்ந்து மனம் விட்டு பேசுவதுடன் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவள் கருத்தையும் கேட்டு அவளையும் சகமனுஷியாக மதித்து, தாய் தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதே தாய்க்கு நாம் அளிக்கும் சிறந்த அன்னையர் தின பரிசாக அமையும். நம்முடன் வாழும் நம் தாய்க்கு இதனை அளித்து விலை மதிப்பு மிக்க வாழ்த்தை பெறலாம். மறைந்து இருந்தால் அவருடைய புகைப்படம் முன்பு அவரை நினைத்து ஒரு நிமிடம் பிரார்த்தித்து அவருடைய நினைவை போற்றுவோம்.

Next Story