கொரோனா நிவாரண உதவியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்


கொரோனா நிவாரண உதவியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 9 May 2021 3:06 AM GMT (Updated: 9 May 2021 3:06 AM GMT)

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை, 

கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் உணவுத்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வாக்குறுதி அளிக்கப்பட்ட தொகையில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 பேர் உள்ளனர். அவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இதற்கு ரூ.4,153.39 கோடி செலவாகும்.

முதல் தவணை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (திங்கட்கிழமை) டோக்கன் வழங்கி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

3 நாட்களுக்குள் டோக்கன்

அதன்படி, ரேஷன் கடை மூலம் நாளொன்றுக்கு 200 ரேஷன் அட்டைகள் என்ற வீதத்தில் டோக்கன் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். நாளை முதல் 3 நாட்களுக்குள் ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுவிடும். டோக்கன் வழங்குவதை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

டோக்கனில் முதல் தவணை பெறும் நாள், நேரம் குறிக்கப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று டோக்கனை காண்பித்து பணம் பெற்றுக்கொள்ளலாம். அப்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை ஒவ்வொரு நாளும் 200 பேருக்கு இந்த மாதத்திற்குள் முதல் தவணைத்தொகை வழங்கப்பட்டுவிடும்.

கலெக்டர் கண்காணிப்பு

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அரிசி அட்டையாக மாற்றுவதற்காக விண்ணப்பித்துள்ள சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது. நிவாரணத்தொகை வழங்கப்படும் அதே வேளையில் வழக்கமாக பெறும் ரேஷன் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். முதல் தவணைத்தொகை உரியவருக்கு சென்றடைகிறதா? என்பதை மாவட்ட கலெக்டர் கண்காணிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story