மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு


மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு
x
தினத்தந்தி 9 May 2021 5:00 AM GMT (Updated: 9 May 2021 5:00 AM GMT)

தமிழகத்தில் மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள், வசதிகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அவர் பதவி ஏற்றபின் மேற்கொண்ட இந்த முதல் ஆய்வின்போது இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் ரா.மூர்த்தி, ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 1,500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு வருகிற திங்கட்கிழமை முதல் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

கூடுதலாக 12,500 படுக்கைகள்

தமிழகத்தில் புதிதாக 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் வருகிற 15-ந் தேதிக்குள் தயார் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு ஒரே இடத்தில் கூடுகின்றனர். இதனால் அங்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, மற்ற மாவட்டங்களிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனையைத் தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் 5 மாவட்டங்களில் விற்பனை

அதன்படி, தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியில் முதல்-அமைச்சர் ஈடுபட்டுள்ளார். தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டண நிர்ணயம் தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். அதேபோல் மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் செயல்பட வைக்கப்படும்.

சித்த மருத்துவ முறை

கொரோனா சிகிச்சைக்கு, சித்த, ஆயுர்வேத, யோகா போன்ற மருத்துவ முறைகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி திங்கட்கிழமை சென்னை மாநகராட்சியின் சார்பில் சித்த மருத்துவ முறை தொடங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும், சித்த, யோகா மருத்துவ சிகிச்சை முறைகள் தொடங்கும்.

மருத்துவ சேவைக்கும் ஊரடங்குக்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகள் முழு ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம், கட்டளை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, மாநில தடுப்பூசி குளிர்பதன சேமிப்பு நிலையத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கொரோனா தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Story