கொரோனா முதல் தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் 15-ந் தேதியில் இருந்து வழங்கப்பட வேண்டும் கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு


கொரோனா முதல் தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் 15-ந் தேதியில் இருந்து வழங்கப்பட வேண்டும் கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 9 May 2021 5:44 AM GMT (Updated: 9 May 2021 5:44 AM GMT)

கொரோனா முதல் தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் 15-ந் தேதியில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரத்தில் இருந்து முதல் கட்டமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிவாரண தொகை வழங்கப்படுவது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் சஜ்ஜன்சிங் சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலெக்டர் பொறுப்பு

கொரோனா காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், தொற்று காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் ரூ.4,153.39 கோடி செலவில் இந்த மாதத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையினை முதல் தவணையாக வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த தொகையை வினியோகம் செய்து முடிக்கவேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட கலெக்டர்களை சாரும். சென்னையில் உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் பொறுப்பில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஆர்வத்தில்...

கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் அனைத்து அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் மக்கள் வருவதை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் ரேஷன் அட்டைதார்களுக்கு நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு 10-ந் தேதி (நாளை) முதல் 12-ந் தேதி ஆகிய 3 தினங்களில் வீடு தோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். இந்த தொகை 15-ந் தேதி முதல் வழங்கப்பட வேண்டும்.

புகாரின்றி...

ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில் கொரோனா நிவாரண முதல் தவணை தொகை எந்த புகாருக்கு இடமின்றி வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் ரொக்கத்தொகை வங்கி வாயிலாக செலுத்தப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினந்தோறும் ரொக்கமாக பெற்று ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.

நோட்டுகள்

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்க பணத்தை, 4 ரூ.500 தாள்கள் அல்லது ஒரு ரூ.2 ஆயிரம் தாளாக வெளிப்படையாக வழங்கவேண்டும். ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. நிவாரண உதவித்தொகையை மின்னணு ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகத்தான் வழங்கவேண்டும். குடும்ப அட்டை இல்லாத இனங்களில் அவர்களுக்கு ஏற்கனவே உள்ள ‘இ-போஸ் டிவைஸ்' மூலம் நிவாரண உதவித்தொகையை வழங்கலாம்.

இடைவெளி

நிவாரண உதவித்தொகை முதல் தவணையை பெற வரும் ரேஷன் அட்டைதாரர்கள் 1 மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதனை தவறாமல் பின்பற்றவேண்டும். நிவாரண உதவித்தொகையை பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ரேஷன் கடை ஊழியர்கள் தவறாமல் முக கவசம் அணியவேண்டும். கிருமி நாசினி ரேஷன் கடைகளில் வைக்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அவசியம். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.

நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியை கண்காணிக்க நடமாடும் கண்காணிப்பு குழுக்களை நியமிக்க வேண்டும். கொரோனா தொற்றை தடுக்க வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story