தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2021 6:02 AM GMT (Updated: 9 May 2021 6:02 AM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரையிலான 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால், வருமுன் காப்போம்  என்ற பாணியில் முன்கூட்டியே தேவையான மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் விரும்பினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை செயல்பட்டது. இந்த கடைகளில் மதுபிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்து தேவையான மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேற்று களைகட்டியது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 426.24 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில், சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 100.43 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய், மதுரையில் 87.20 கோடி ரூபாய், சேலத்தில் 79.82 கோடி ரூபாய், கோவையில் 76.12 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story