"ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்" - கமல்ஹாசன்


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 9 May 2021 9:23 AM GMT (Updated: 9 May 2021 9:23 AM GMT)

பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ஒரு ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த பல மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை.

கொரோனா பேரிடர் காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கவச ஆடைகள், வெப்பநிலை ஸ்கேனர்கள், ஆக்சிமீட்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு, ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

சிறு, குறு வணிகம், விமானப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை அரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய அங்காடிகள் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க தேவையான உதவிகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டும். அத்துடன் அதிகாரிகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வுகள் கண்டடையப்பட வேண்டும்.

பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து தேவையான முடிவுகளை எடுக்க ஏதுவாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும்".

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story