சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு


சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
x
தினத்தந்தி 9 May 2021 11:56 PM GMT (Updated: 9 May 2021 11:56 PM GMT)

தமிழக சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி, நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், கோவை (தெற்கு) தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சரஸ்வதி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகியுள்ளனர்.

இந்தநிலையில், தமிழக சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளது. எனவே, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்கான சட்டசபை தலைவரை தேர்வு செய்து வருகின்றன.

ஒரு மனதாக தேர்வு

அந்த வகையில், பா.ஜ.க. சட்டசபை தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி தலைமை தாங்கினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் இல.கணேசன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சட்டசபை பா.ஜ.க. தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

4 தூண்களாக செயல்படுவார்கள்

கூட்டத்துக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது:-

‘சட்டமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் என்று கூறி வந்தோம். அது இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று சொன்னவர்களின் முகத்தில் கரியைப் பூசி, 4 இடங்களில் தாமரை மலர்ந்து இருக்கிறது. இவர்கள் சட்டசபையை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக செயல்படுவார்கள்.

தமிழர் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்மொழி, கலாசாரத்துக்காகவும் எங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். அரசாங்கத்துக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவதோடு, குறைகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டார்கள். எங்கள் பணி சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர்

சட்டசபை பா.ஜ.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் முன்னாள் அமைச்சராவார். ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்த முறை நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். 

Next Story