இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல எல்லா பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும் அரசு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல எல்லா பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும் அரசு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 10 May 2021 12:03 AM GMT (Updated: 10 May 2021 12:03 AM GMT)

‘இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல; எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லா பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும் அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, 

தொண்டர்களுக்கு என்றும் உங்களில் ஒருவனாக நான், தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்கு பிறகு எழுதுகிற முதல் கடிதம் இது.

தமிழகத்தை தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நான் எடுத்திருக்கின்ற சூளுரை. கடின உழைப்பை சிந்தத் தூண்டுவதும், தமிழ்ப் பண்பாட்டை மீண்டும் துளிர்க்கச் செய்வதும், நம் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வதும் மக்கள் நல வாழ்வைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதும்

இந்திய அரசியல் சட்டத்தில் பொறிக்கப் பட்டுள்ள மாநில உரிமைகளை எந்த நிலையிலும் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் நிர்வாகம் செய்வதும் நாம் கொண்டிருக்கின்ற தனிப் பெரும் நோக்கங்கள்.

எந்த பயனும் இல்லை

கடந்த பத்தாண்டுகளாக ஏமாற்றங்களையே எதிர்கொண்ட மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன்.

கடந்த காலத்தை நினைத்து வசைபாடி காலத்தை கழிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இருளைப் பழிப்பதைவிட, அதனை அகற்றும் ஓர் அகல் விளக்கை ஏற்றுவது உன்னதமான செயல். இலையுதிரை குறை சொல்வதைவிட, வசந்தத்தை வரவழைக்க பாடுபட முற்படுவது பயனுள்ள செயல்.

ஆய்வு நடத்தினேன்

நாம் ஒரு நிமிடம் சோர்ந்தாலும், அலட்சியமாக இருந்தாலும், அஜாக்கிரதையாக நடந்தாலும், கொடுந்தொற்றுக்கு இரையாகி விடுவோம். எனவே எந்த நொடியிலும் எச்சரிக்கையுடன் இருப்போம். முககவசம் என்பது, அடுத்தவர்கள் கட்டாயத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. அது நம்மைக் காத்துக்கொள்ள நாம் எடுக்கிற முன்னெச்சரிக்கை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

மே 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் நடந்த எளிய விழாவில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவி ஏற்றாலும், தேர்தல் செய்திகள் வந்துகொண்டிருக்கும்போதே இத்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தேன் என்பதையும், அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தமிழக ஊடகங்கள் மூலமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

விழிப்புணர்வு

கொரோனாவிற்காக உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருமே உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

பொதுமக்கள் அச்சம் தவிர்த்து, முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி முழுமையான விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால், நாம் விரைவில் இந்தக் கடுமையான சோதனையிலிருந்து வெளிவந்து, ஆக்கபூர்வமாக நற்பணிகள் ஆற்ற முடியும்.

மக்களுக்கு சொந்தமான அரசு

நான் பணியேற்றிருக்கும் இந்த நேரத்தில் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன். நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இது தி.மு.க. தலைவரான என் தலைமையில் அமைந்த அரசு என்றாலும், இது தி.மு.க. என்ற கட்சியின் அரசு அல்ல; எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் - அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு; தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் தமிழக அரசு என்பதை அழுத்தமாக உணர்த்த விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story