“கொரோனா ஒரு யுத்தம்; ஒன்றாக போராடுவது அவசியம்” மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்


“கொரோனா ஒரு யுத்தம்; ஒன்றாக போராடுவது அவசியம்” மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 10 May 2021 1:21 AM GMT (Updated: 10 May 2021 1:21 AM GMT)

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனா முதலாவது அலைக்கு பின் தடுப்பு நடவடிக்கைகளில், மத்திய அரசு தனது பணியை கைவிட்டு, கடந்த சில மாதங்களாக மாநிலங்களிடமே முழுபொறுப்பை ஒப்படைத்து வருவதாக வதந்தி பரப்பப்படுகிறது.

சுகாதாரம், மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றபோதும், பெருந்தொற்று என்ற வகையில், தேசிய அளவில் ஒருங்கிணைப்பும், போதுமான நிதி ஆதாரங்களும் தேவைப்படுவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டது. மாநில அரசுகளுக்கு கணிசமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் தந்தது.

மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்னவோ, டெல்லியில் இருந்து வெறுமனே ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதோடு நின்றுவிடவில்லை.

பல நேரங்களில் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆராய உயர்நிலை கண்காணிப்பு குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

75-க்கும் மேற்பட்ட குழுக்கள்

நோயை கட்டுப்படுத்துவது மற்றும் நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பின் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களை கொண்ட 75-க்கும் அதிகமான குழுக்களை அனுப்பி வைத்தது.

மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட மராட்டியம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் கண்காணிப்பு மற்றும் உதவி செய்வதற்கான மத்திய உயர்நிலை குழுக்கள் பிப்ரவரி 24-ந் தேதி அறிவிக்கப்பட்டன.

இந்த மாநிலங்களில் நோய்த்தொற்று பரவுவதை மத்திய அரசு மார்ச் மாதம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டது.

தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை

இந்த மாநிலங்கள், மத்திய அரசின் முன்கூட்டிய எச்சரிக்கைகளையும், தகவல்களையும் மிகத்தீவிரமாக கடைப்பிடித்திருந்தால், நோய் அதிகரிப்பு இவ்வளவு கடுமையாக இருந்திருக்காது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடமை உணர்வோடும், முனைப்போடும் முயற்சிகளை மேற்கொண்டபோது, எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கம்போல் அரசியல் செய்வதை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் தலைமை பொறுப்பில் உள்ள ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை விவரிக்க தேவையில்லை. தடுப்பூசி தொடர்பான விஷயத்தில் சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் அணுகுமுறையும் நீண்டகாலம் மாநிலத்தில் இருந்து வெளியே இருந்ததும்கூட நன்கு அறியப்பட்டதுதான்.

மோடி என்ன கூறினார்?

கொரோனா தடுப்பு முயற்சிகளாக கருதி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சில கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரங்களுக்கும், தங்களை பிரபலப்படுத்தி கொள்ளவும் செலவு செய்தன. அரைகுறையான நிலையில், மத்திய அரசால் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்படுவதாக சில தரப்பினர் தவறான விமர்சனம் செய்யும் நிலையில், மார்ச் 17-ந் தேதியன்று முதல்-மந்திரிகளுடன் நடத்திய கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி என்ன கூறினார்? என்பதை மீண்டும் வலியுறுத்துவது தேவைப்படுகிறது.

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் பல நாடுகள் பல அலைகளால் துயரப்பட்டுள்ளன. நமது நாட்டிலும்கூட பாதிப்பு வீழ்ச்சிக்கு பின் சில மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. மராட்டியத்திலும், மத்திய பிரதேசத்திலும் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கையும்கூட இங்கே அதிகரித்துள்ளது. இந்தமுறை, இதுவரை பாதிக்கப்படாமல் இருந்த பல பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு வகையில் இவை பாதுகாப்பு மண்டலங்களாக இருந்தவை. ஆனால், இப்போது புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். நாட்டின் 70 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களில் இந்த அதிகரிப்பு 150 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ளது. இந்த பெருந்தொற்றை இப்போதைய நிலையிலேயே நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், நாடு தழுவிய பரவலுக்கு வழிவகுக்கும். அதிகரித்துவரும் கொரோனாவின் 2-வது அலையை நாம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

200 மாவட்டங்களில் ஆய்வு

ஒருவர், வெற்றியை பிரகடனப்படுகிறார். அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதிருக்கிறார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றனவா?. தற்போதைய அலையை கண்காணித்த மத்திய அரசு, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சிறப்பு குழுக்களை அனுப்பியது. நாடு முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 50-க்கும் அதிகமான குழுக்கள் ஏப்ரலில் அனுப்பி வைக்கப்பட்டன. கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு இந்த குழுக்கள் உதவி செய்தன.

மேலும், மார்ச் மாத பிற்பகுதியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில், மாவட்ட அளவிலான நோய்த்தடுப்பு உத்திகளை மாநிலங்கள் உருவாக்கின. மார்ச் 27-ந் தேதிக்கும், ஏப்ரல் 15-ந் தேதிக்கும் இடையே அதிக கவனம் பெறும் சுமார் 200 மாவட்டங்களின் செயல் திட்டங்களை மத்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

தொடர்ந்து புதிய சவால்கள் உருவான நிலையில், குடிமக்களின் உயிர்களை பாதுகாக்க பன்முக பரிமாண அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடும் முதல் கட்ட இயக்கம் திட்டமிடப்பட்டு தீவிரமாக அமலாக்கப்பட்டது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், சுகாதார கவனிப்புக்கான அடிப்படை கட்டமைப்பின் குறைபாடுகளை பல மாநிலங்கள் உணர்ந்து, மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாசக்கருவிகள் போன்ற முக்கியமானவற்றை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்தன.

இது ஒரு யுத்தம்

தவறான தகவலுக்கு மாறாக, பெருந்தொற்றை கையாள்வதில் இந்த அம்சங்கள் அனைத்தையும் இடைவிடாமல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

எங்களை பொறுத்தவரை பெருந்தொற்றை வெற்றிகொள்வதும், குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் மிக உயர்ந்த முன்னுரிமையாக நீடிக்கிறது. இது ஒரு யுத்தம். இதில் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே இயக்கம் என நாம் போராடுவது அவசியம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story