திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு


திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2021 1:23 AM GMT (Updated: 10 May 2021 1:23 AM GMT)

திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டது. அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, 

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய அமைச்சர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், நல்லுசாமி ஆகியோர் இந்த சிலையை திறந்து வைத்தனர். எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உள்ள பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது. தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காந்தி மார்க்கெட் போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அங்கு வந்து சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்வையிட்டார்.

போலீசில் புகார்

பின்னர் அவர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “எம்.ஜி.ஆர்.சிலையை உடைத்து சமூக விரோத செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அமைந்துள்ள பகுதி மூன்று சாலைகள் பிரியும் இடமாகும். இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story