தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 10 May 2021 2:12 AM GMT (Updated: 10 May 2021 2:12 AM GMT)

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ஒரு மாதத்துக்குள் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, சித்த மருத்துவ முறையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகளை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த பகுதியில் கடந்த ஆண்டு செயல்பட்டு வந்த சித்தா சிகிச்சை மையம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில்...

240 படுக்கைகளுடன் கூடிய இந்த மையத்தில் தற்போது 195 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் குறைவான நோய் அறிகுறி உடையவர்கள். கடந்த ஆண்டை பொறுத்தவரை சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 2 ஆயிரத்து 290 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அந்தவகையில் மீண்டும் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற சிகிச்சை மையங்களை விரிவுப்படுத்த வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், ஒரு மாத காலத்தில் மேலும் 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளன.

அதன்படி தருமபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சித்த சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளன.

மூலிகை உணவுகள்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வரும் சூழலில், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க இதுபோன்ற சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சித்த மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், அமுக்கரா சூரணம் மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவை உள்மருந்தாகவும், கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவை வெளிமருந்தாகவும் வழங்கப்படுகிறது. உணவு முறையை பொறுத்தவரை, காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய மூலிகை உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

70 படுக்கைகள் கொண்ட மையம்

அதுமட்டுமின்றி யோகா, வர்ம சிகிச்சை, மூலிகை நீராவி சிகிச்சை, மனநல ஆலோசனைகள் உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் 70 படுக்கைகளுடன் கூடிய சித்தா கொரோனா சிகிச்சை மையம் அடுத்த வாரத்தில் திறக்கப்பட இருக்கிறது.

சென்னையில் தற்போது செயல்பட்டு வரும் 21 கொரோனா சிகிச்சை மையங்களை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேஷ், வட்டார துணை கமிஷனர் பி.ஆகாஷ், பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story