முழு ஊரடங்கு அமலான நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை


முழு ஊரடங்கு அமலான நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 10 May 2021 2:18 AM GMT (Updated: 10 May 2021 2:18 AM GMT)

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமலான நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.426 கோடியே 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மிக தீவிரமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரை அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முழு ஊரடங்கு இன்று முதல் அமலான நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் இந்த 2 தினங்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.

ரூ.426 கோடியே 24 லட்சம்

அதன்படி, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்தனர். அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால், மது பாட்டில்களை வாங்கி பதுக்கினர்.

நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.426 கோடியே 24 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.100 கோடியே 43 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, மதுரை மண்டலத்தில் ரூ.87 கோடியே 28 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.82 கோடியே 59 லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.79 கோடியே 82 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் ரூ.76 கோடியே 12 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது.

நேற்றும் விற்பனை படுஜோர்

நேற்று முன்தினத்தை போலவே, நேற்றும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் காணப்பட்டது. சில இடங்களில் நீண்ட வரிசையில் நின்று மூட்டை, மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. அந்தவகையில் நேற்றும் டாஸ்மாக் கடைகள் மது விற்பனை படுஜோராக இருந்தது.

நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட அதே அளவுக்கோ அல்லது அதை விட சற்று கூடுதலாகவோ மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வரும் நிலையில் ‘டாஸ்மாக்’ கடைகள் முழுவதிலும் நேற்று மதுவிற்பனை ஜோராக நடந்தது. அந்தளவு மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கில் தொடர்ந்து 14 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்பதால், தேவையான அளவு மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் ஆர்வம் காட்டினர். கை நிறைய பாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றனர். மதுபாட்டில்களை பையில் கொண்டு செல்வோரையும் பார்க்க முடிந்தது.

இதேபோல அயல்நாட்டு மதுபானம் விற்பனை செய்யப்படும் ‘டாஸ்மாக்’ எலைட் கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றனர்.

Next Story