தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு


தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது-  போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 4:05 AM GMT (Updated: 10 May 2021 4:05 AM GMT)

சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.

அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களும் (சனி, ஞாயிறு) அனைத்து கடைகளையும் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கடை பிடிக்கப்படும். முழு ஊரடங்கு காரணமாக இன்று பஸ், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் பரபரப்பு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. 

முழு ஊரடங்கில் தடையை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் 10 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story