இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி: சொந்த ஊர் செல்ல கோயம்பேட்டில் குவிந்த பொதுமக்கள்


இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி: சொந்த ஊர் செல்ல கோயம்பேட்டில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 May 2021 4:24 AM GMT (Updated: 10 May 2021 4:24 AM GMT)

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக மூட்டை, முடிச்சுகளுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று குவிந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த முழு ஊரடங்கு காலத்தில், மளிகை, காய்கறி, இறைச்சி, மீன், டீ கடைகள் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர இதர அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

இந்தநிலையில், வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரில் பிழைப்பு தேடி வசித்து வந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், செய்வதறியாது திகைத்துள்ளனர். இதில் பெரும்பாலானோர், இன்னும் ஊரடங்கு எத்தனை முறை நீட்டிக்கப்படுமோ என்ற அச்சத்தோடு சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தனர்.

இவ்வாறு சொந்த ஊர் செல்ல விரும்புபவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் நேற்றும், நேற்று முன்தினமும் முழு நேர அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு, சிறப்பு பஸ்களும் விடப்பட்டன. அதன்படி, சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கும் சென்னையை சுற்றி உள்ள அண்டை மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன.

குடும்பம் குடும்பமாக...

இந்தநிலையில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட 2-ம் நாளான நேற்று காலை முதலே கோயம்பேடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. கால் டாக்சிகள், ஆட்டோக்களில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மூட்டை முடிச்சுகளுடன் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். மேலும், தனியாக சொந்த ஊர் செல்லும் நபர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மோட்டார் சைக்கிள்களில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர்.

இது தவிர, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநகர பஸ்கள் மூலமாகவும் ஏராளமானோர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று காலை முதலே சென்னையின் அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம், தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் நடைமேடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

அலைமோதிய மக்கள் கூட்டம்

அதே நேரத்தில், நீண்ட தூர இடங்களான மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு செல்ல காலை முதலே பஸ்கள் இயக்கப்பட்டாலும், மாலையில் புறப்படும் பஸ்களிலேயே அதிக அளவிலானோர் பயணித்தனர். மேலும், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் நேற்றும் இயங்கியதால் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தங்களின் வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு செல்ல பஸ் ஏற வந்தனர்.

இதே போன்று, ஆம்னி பஸ்களும் நேற்று காலை முதல் இயக்கப்பட்டாலும், மாலை நேர ஆம்னி பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ஆம்னி பஸ்களில் பார்சல் போட்டு தங்களுடன் ஊருக்கு எடுத்து சென்றதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில், ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பியதால் கோயம்பேடு பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் நுழைந்த உடனேயே, அனைவரின் காதுகளிலும் கேட்கும் வகையில், ‘‘பயணிகள் அனைவரும் உடல் வெப்பநிலை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பயணிகள் யாரும் முகக்கவசம் இன்றி பஸ் நிலையத்திற்குள் நுழையக்கூடாது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் தவிர தேவையற்றோர் பஸ் நிலையத்திற்குள் நிற்கக்கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அங்கு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. அதே நேரத்தில், பெரும்பாலும் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்திருந்ததை பார்க்க முடிந்தது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்கவிட்ட ஒன்றாகவே தெரிந்தது. மக்கள் யாரும் கொரோனா தொற்று குறித்து கொஞ்சம் கூட அச்சமின்றி ஒருவருக்கு ஒருவர் போதுமான இடைவெளி இன்றி நெருக்கமாக காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

Next Story