சென்டிரலில் ரெயிலுக்காக தவித்த பயணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை


சென்டிரலில் ரெயிலுக்காக தவித்த பயணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை
x
தினத்தந்தி 10 May 2021 11:55 PM GMT (Updated: 10 May 2021 11:55 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக பயணிகள் தவிப்பதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார்.

சென்னை, 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள், உரிய பயணத்தை மேற்கொள்ள முடியாமல் நீண்ட நேரமாக தவித்து வந்தனர். இந்த செய்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து தவித்து வரும் அந்த பயணிகளின் குறைகளை போக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், நில நிர்வாக கூடுதல் கமிஷனர் மரியம் பல்லவி பல்தேவ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் மேகநாத ரெட்டி ஆகிய அரசு உயர் அதிகாரிகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர்.

உதவி மையம்

அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை, கண்ணப்பர் திடலில் உள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

அந்த பயணிகள் அனைவரும் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரெயில் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு ரெயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசால் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பயணிகளின் வசதிக்காக உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மனமார்ந்த நன்றி

பயணிகள் தங்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து, தாங்கள் பயணம் செய்வதற்கு உரிய ஏற்பாடு செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story