18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி: தமிழகத்துக்கு விரைவில் 15 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி: தமிழகத்துக்கு விரைவில் 15 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது
x
தினத்தந்தி 11 May 2021 1:00 AM GMT (Updated: 11 May 2021 1:00 AM GMT)

18 வயது மேற்பட்டவர்களுக்காக தடுப்பூசி போடும் பணிக்காக தமிழகத்துக்கு விரைவில் 15 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஆவடி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பனிமலர் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. இங்கு தினசரி ஆயிரம் முதல் 1,300 பேர் வரை நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 17 இடங்களில் நடமாடும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், தினசரி 70 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதில் முதல் தவணை தடுப்பூசி 1 லட்சத்து 44 ஆயிரத்து 58 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 53 ஆயிரத்து 978 பேருக்கும் போடப்பட்டு உள்ளது.

ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம்

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பொதுப் பயன்பாட்டில் உள்ள 50 படுக்கைகளும், கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஒரு தளம் ஒதுக்கப்பட்டு, அந்த பணிகளும் நடைபெறுகிறது.

இங்குள்ள 10 ஆக்சிஜன் படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக நாளை மறுநாள் முதல் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஆக்சிஜன் தயாரிப்பு நிலையமும் இங்கு அமைக்கப்பட்டு, அதன் மூலம் மேலும் 40 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்து தரும் பணிகளும் தொடங்க இருக்கிறது.

மேலும், பல நாட்களாக எந்த ஒரு பணியும் நடைபெறாமல் இருந்த ரூ.27 கோடி செலவிலான புதிய மருத்துவமனை இணைப்பு கட்டிட பணிகளும் நாளை முதல் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 142 இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையத்தையும் உருவாக்க தலா ரூ.16 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணிகள் நடைபெற உள்ளது.

ரூ.60 லட்சம் செலவில்

முதல் இடமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அந்த பணிகள் தொடங்கப்பட்டு 10 நாட்களுக்குள் அந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி முடிவடையும். பின்னர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மேலும், பெரம்பலூர், விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 60 லட்சம் ரூபாய் செலவில் பெரிய அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கான வரைமுறைகள் ஓரிரு நாட்களில் தெளிவாக வெளியிடப்படும்.

ஊரடங்கு நேரத்தில் நாட்டு மருந்து கடைகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழகத்தில் 1,300 எண்ணிக்கையில் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் 300 வாகனங்கள் கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஆவடியில் தடையில்லாமல் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைத்திட வழி செய்யப்படும்.

தடுப்பூசி

‘ரெம்டெசிவிர்’ மருந்து அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.46 கோடி முன்பணம் செலுத்தப்பட்டு உள்ளது. அந்தவகையில் 15 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விரைவில் வரும். அதன் பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் பேசி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு 419 டன் ஆக்சிஜன் வழங்க ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் காஞ்சிகோடு பகுதியில் இருந்து 40 டன் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நாளையோ (இன்று), நாளை மறுநாளோ (நாளை) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story