வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் தொலைபேசியில் 'ஆர்டர்' செய்தால் வீடு தேடி வரும் இலவச உணவு'


வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் தொலைபேசியில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் இலவச உணவு
x
தினத்தந்தி 11 May 2021 1:04 AM GMT (Updated: 11 May 2021 1:04 AM GMT)

வீட்டுத்தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் தொலைபேசியில் ஆர்டர் செய்தால் வீடு தேடி இலவச உணவு வழங்கும் மனிதநேய பணியை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரின் மனைவி சில்பம் கபூர் ரத்தோர் மேற்கொண்டுள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோரின் மனைவி சில்பம் கபூர் ரத்தோர் சமூக சேவை பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ‘ஆரண்யா அறக்கட்டளை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை மூலம் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் புற நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி அவர்களது பசியை போக்குவது இந்த அறக்கட்டளையின் முக்கிய சேவைகளில் ஒன்றாகும்.

வீடு தேடி இலவச உணவு

தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ‘ஆரண்யா அறக்கட்டளை' தனது சமூக சேவை பணியை மேலும் விரிவுபடுத்தி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கும், ஆதரவற்ற வயதான நோயாளிகளுக்கும், நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கும் வீடு தேடி சென்று உணவு வழங்கும் உன்னத பணியை ‘ஆரண்யா அறக்கட்டளை' தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அடையார் ஆகிய 5 இடங்களில் மட்டும் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண் அறிவிப்பு

இந்த பகுதியை சேர்ந்த வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் இலவச உணவு வேண்டும் என்றால் 044-42997501 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம் என்றும், இந்த சேவை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச உணவு தேவைப்படுவோர்கள் ஒரு நாள் முன்னதாகவே தொலைபேசியில் ஆர்டர் செய்ய வேண்டும் என்று ஆரண்யா அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story