கொரோனா பரவும் அபாயம்: ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க முழு ஊரடங்கிலும் அலைமோதும் மக்கள்


கொரோனா பரவும் அபாயம்: ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க முழு ஊரடங்கிலும் அலைமோதும் மக்கள்
x
தினத்தந்தி 11 May 2021 2:44 AM GMT (Updated: 11 May 2021 2:44 AM GMT)

‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும், போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

சென்னை, 

கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து, உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி முதன்முதலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே மருந்து வினியோகம் நடைபெற்றதால், மற்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

ஒரு கட்டத்தில் கூட்டம் பல மடங்கு அதிகரித்ததால், கூடுதலாக ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டு, மருந்து வினியோகம் செய்யும் இடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அங்கும் நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

மேலும் டோக்கன் வழங்கி வினியோகிக்கும் முறையும் கொண்டு வரப்பட்டது. இதற்காக இரவு-பகலாக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வாசலில் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. மேலும், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் விற்பனையை தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இந்தநிலையில், 2 நாட்களுக்கு முன்பு மதுரை, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் தொடங்கப்பட்டது. ஆனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து குவியும் பொதுமக்கள் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை. ஆரம்பத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள், தற்போது, மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு கூட்டமாக கூடி நின்று, உள்ளே அனுமதிக்குமாறு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

14-வது நாளாக நேற்றும் ரெம்டெசிவிர் மருந்து வாங்கும் நோயாளிகளின் உறவினர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் தான் இருந்தது. முழு ஊரடங்காக இருந்தாலும், மருத்துவக்கல்லூரி வாசல் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் குவிந்து நின்றனர்.

அப்போது, பொதுமக்கள் வரிசையில் நிற்காமல், நுழைவு வாயிலை அடைத்து கொண்டு, திரண்டு நின்றனர். சமூக இடைவெளி சிறிதும் இல்லாததால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அந்த இடத்தில் ஏற்பட்டது.

சுகாதாரத்துறையின் கடமை

போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த போராடுகின்றனர். ஆனாலும், அங்கிருந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், போலீசார் என்ன செய்வதென்று திணறுகின்றனர்.

‘ரெம்டெசிவிர்’ மருந்து உயிர்காக்கும் மருந்து இல்லை என்றும், அதனை வாங்க சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், அனைவருக்கும் தேவைப்படாது என்றும் சுகாதார வல்லுனர்கள் பலர் கூறியும், தினமும் ஆயிரக்கணக்கானோர், மருந்து வாங்க மருத்துவமனையில் குவிகின்றனர்.

எனவே, ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு தெளிவாய் எடுத்து கூறுவது, சுகாதாரத்துறையின் கடமையாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story