அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்


அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
x
தினத்தந்தி 11 May 2021 3:58 AM GMT (Updated: 11 May 2021 3:58 AM GMT)

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் அமைச்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டு தனிமை

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இதையடுத்து அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் டாக்டர்களின் ஆலோசனையின்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஏற்கெனவே நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வீட்டு தனிமையில் இருப்பது நினைவுகூரத்தகக்து.

இதேபோல் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரும் வீட்டு தனிமையில் உள்ளார்.

Next Story