பஸ்கள் ஓடவில்லை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன


பஸ்கள் ஓடவில்லை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன
x
தினத்தந்தி 11 May 2021 4:14 AM GMT (Updated: 11 May 2021 4:14 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 15 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தீவிரம் காட்டி வருகிறது. தினமும் கொரோனா பிடியில் சிக்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்துகொண்டே வருகிறது. இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா தீவிரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் நேற்று காலை 4 மணி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். முழு ஊரடங்கின்போது கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

அதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பஸ் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ஆட்டோ, கால் டாக்சி இயங்கவில்லை. காய்கறி, மளிகை கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன. அதன்பின்னர் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதேபோல பகல் 12 மணிக்கு மேல் சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன. அத்தியாவசிய, அவசர தேவைகளுக்காக செல்வோருக்கு ஏதுவாக சில வழித்தடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேம்பாலங்கள் மூடப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே போலீசார் நின்று தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.

சாலைகள் அடைப்பு

தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும் சாலைகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வாகனங்கள் வழக்கம்போல சென்றதையே பார்க்க முடிந்தது. ஆட்டோக்கள் கூட ஆர்ப்பரித்து சென்றன. பிற்பகலுக்கு மேல் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்தது.

அதனைத்தொடர்ந்தே சாலைகளில் வாகனங்களின் ஆர்ப்பரிப்பு குறைந்து அமைதியானது. அந்தவகையில் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, டைடல் பார்க் சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, அடையாறு எல்.பி. சாலை, ராஜாஜி சாலை உட்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் மூடப்பட்டன. மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு

அதேபோல பகல் 12 மணிக்குமேல் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று பகல் 12 மணிக்கு மேல் வெறிச்சோடின. தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடியது. அதேவேளை ஓட்டல்கள் மட்டும் இயங்கின. பார்சல் சேவை மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து முடக்கப்பட்டதின் காரணமாக பஸ்கள் இயங்கவில்லை.

போலீசார் கண்காணிப்பு

சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனாலும் நேற்று இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை குறையவில்லை. இதனால் தேவையில்லாமல் சாலையில் சுற்றியோரை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை போலீசார் அனுமதித்தனர். மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story