மாநில செய்திகள்

“அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் + "||" + Do not gift my books at government ceremonies - General Secretary Irai Anbu request

“அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்

“அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்
தனது புத்தகங்களை எந்த எக்காரணம் கொண்டும் அரசு சார்பில் வழங்க வேண்டாம் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றியதோடு, பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகள், சிவில் தேர்வுகளை அணுகுவது குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் புத்தகங்கள் உள்ளிட்ட பல நூல்களை வெ.இறையன்பு எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

“நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். 

நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை பள்ளிக்கல்வித்துறையின் எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.

அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்குப் பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.

இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.