தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்


தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில்  60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
x
தினத்தந்தி 11 May 2021 9:32 AM GMT (Updated: 11 May 2021 9:32 AM GMT)

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின்  தமிழகத்தின் 16வது கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

2016 சட்டசபையில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால், இம்முறை இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.  ம.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , கொங்கு மக்கள் தேசிய கட்சி,புரட்சி பாரதம் ஆகிய மற்ற கட்சிகளும்இடம்பெற்று உள்ளன.

தமிழ்நாடு சட்டசபை எம்.எல்.ஏக்களில்  60 சதவீதம் பேர்மீது கிரிமினல்  வழக்குகள் இருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது ஜனநாயக சீர்திருத்தக் சங்கம்.

இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்புதான் ஏ.டி.ஆர். 1999-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, தேர்தல் ஆவணங்கள், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள், வேட்பாளர்களின் பிராமண பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் 234 எம்.எல்.ஏ-க்களில் 224 எம்.எல்.ஏ-க்களின் பிரமாண பத்திரங்களை, தமிழ்நாடு எலெக்‌ஷன் வாட்ச் என்ற அமைப்போடு இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர் அமைப்பு. மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களின்(8 திமுக, 2 காங்கிரஸ்) பிரமாண பத்திரங்கள் தெளிவாக இல்லையென்பதால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை' என்று தெரிவித்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 224 எம்.எல்.ஏ-க்களில் 134 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்சிவாரியாக கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏ-க்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது ஏ.டி.ஆர். தி.மு.க-வில் 96 எம்.எல்.ஏ-க்களும், அ.தி.மு.க 15 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸில் 12 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-வில் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்டவர்களாக உள்ளனர். வி.சி.க-வில் மூன்று பேரும், சி.பி.ஐ-ல் இரண்டு பேரும், பா.ம.க-வில் நான்கு பேரும் கிரிமினல் குற்ற வழக்குகள் கொண்டவர்களாக உள்ளனர்.

2021 சட்டமன்றத்தில், 57 எம்.எல்.ஏ-க்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளது.  தி.மு.க-வில் 39 பேர் மீதும், அ.தி.மு.க-வில் ஐந்து பேர் மீதும், காங்கிரஸில் ஆறு பேர் மீதும், பா.ம.க-வில் மூன்று பேர் மீதும், பா.ஜ.க-வில் இரண்டு பேர் மீதும் தீவிர கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.வி.சி.க, சி.பி.ஐ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களில் தலா ஒருவர்மீது தீவிர கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன என அறிக்கை கூறுகிறது.

Next Story