புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் - கி.வீரமணி அறிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2021 9:13 PM GMT (Updated: 11 May 2021 9:13 PM GMT)

புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலின் முடிவுகள் 2ஆம் தேதி மே 2021இல் வெளி வந்தன.
அதன்படி,

என்.ஆர்.காங்கிரஸ்- 10 இடங்கள்
பா.ஜ.க. - 6 இடங்கள்
தி.மு.க. - 6 இடங்கள்
சுயேச்சைகள் - 6 இடங்கள்
காங்கிரஸ் - 2 இடங்கள்
மொத்தம் -  30 இடங்கள்

புதுவை சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பா.ஜ.க. 6 இடங்களையும் பெற்றுள்ளது. இதனால் என்.ரங்கசாமி, தான்தான் முதல்-அமைச்சர், என்று கூறி, பா.ஜ.க.வுக்கு அமைச்சரவையில் இடம் தர ஒப்புக் கொண்டார்; ஆனால், பா.ஜ.க.வுக்குத் துணை முதல்-அமைச்சர் பதவி என்பதை மனதார அவரோ, அவரது கட்சியினரோ ஏற்கவில்லை.

இந்த நிலையில், 3 பா.ஜ.க.வினரை நியமன உறுப்பினர்களாக்கி, பதவியேற்ற முதல்வர் என்.ரங்கசாமியின் ஆட்சி நாற்காலியில் அமர்வதற்கு முன்பே, அதனை ஆட்டிப் பார்க்கும் வகையில் தனது கொடுங்கரத்தை புதுச்சேரியில் பா.ஜ.க. நீட்டிட முழு ஆயத்தத்தில் இறங்கிவிட்டது. 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் மூவர், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதாக அவர்களிடம் இருந்து கடிதங்களையும் இப்போதே பெற்றுவிட்டனர். அதன்படி, புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க.வின் பலம் 12 ஆக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், எந்த நேரத்திலும் இந்த “கண்ணிவெடி” அந்த ஆளும் கட்சிக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.

இதிலிருந்து புதுவையைக் காப்பாற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே முடியும். அப்போதுதான் அங்கு விடியல் ஏற்படும்.  அதற்கு சரியான தலைமை அங்கும் மதச் சார்பற்ற கூட்டணியை தமிழ்நாட்டைப் போல பல களங் கண்டு, லட்சிய ரீதியான பலத்துடன் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாகக் கட்ட வேண்டும்.

புதுவை மக்கள் ஆயத்தமாக இருப்பார்கள். அங்குள்ள தலைவர்கள் - தன் முனைப்பு, சுய அதிகார ஆசைகளைப் புறந்தள்ளி, லட்சியங்களுக்கே முன்னுரிமை தந்து - மற்ற முற்போக்குக் கொள்கைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஆரோக்கிய அரசியலைக் கட்ட இப்போதிலிருந்தே ஆயத்தமாக வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பக்கமும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story