தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி: தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன் ‘மனதில் உள்ளதை அனுப்புங்கள்’ என அறிக்கை


தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி: தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன் ‘மனதில் உள்ளதை அனுப்புங்கள்’ என அறிக்கை
x
தினத்தந்தி 12 May 2021 1:23 AM GMT (Updated: 12 May 2021 1:23 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. இதனைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்க இருக்கிறார். ‘மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்’ என கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் இந்த நிலை வெற்றி எனும் பட்டியலில் சேராது எனினும் அந்த பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பது உறுதி. எப்படி? நான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.

இன்னும் 2 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தால், சரித்திரம் சற்றே மாறியிருக்கும். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அந்த 33 சதவீத மக்கள் நம் பக்கம் இருந்தார்கள். தொடர்ந்து இருப்பார்கள். இதுபோன்று எல்லா தொகுதிகளும் ஆகமுடியும். நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்.

கடமை தவறினால் காலம் தள்ளமுடியாது

தற்போது விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த விமர்சனங்களில் எத்தனை விழுக்காடு நிஜம் இருக்கிறது என்று ஆய்ந்து பொய்களை களைந்து அயர்வின்றி பயணத்தை தொடர்வோம். தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவார்கள் என காத்திருப்பவன் நானல்ல. தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன் நான். கடமை தவறினால் இங்கே காலம் தள்ள முடியாதென்பதை உணர்ந்தவர்கள் தாமே வேறு சந்தை தேடிப் போய்விடுவர் என்பது கட்சியை தொடங்கும்போது எனக்கு தெரிந்ததே.

எல்லா தொகுதிகளிலும் பொறுப்புகளுக்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தும் அந்த பொறுப்புகளுக்கு ஆள் போடாமல் இருந்தது விபத்தல்ல என்பது இப்போது வெளிச்சமாகிறது.

மனதில் உள்ளதை சொல்லுங்கள்

நேர்மை எனும் அந்த சுகம், சவுகர்யம் எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் (இ.மெயில்) செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது,

கட்சிக்கு மகத்தானது. எனவே தவறாது உங்கள் சிந்தனைகளை எழுத்தில் அனுப்புங்கள். இன்றே நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story