கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் நிதி ஆதாரம் தேவை ‘முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் நிதி ஆதாரம் தேவை ‘முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 May 2021 1:52 AM GMT (Updated: 12 May 2021 1:52 AM GMT)

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள அரசுக்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படுவதால் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.

இச்சூழலில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.

நன்கொடைக்கு வரி விலக்கு

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80 (ஜி)-ன்கீழ் 100 சதவீதம் வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல்நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன் கீழ் விலக்களிக்கப்படும்.

இணையதளம் மூலம் செலுத்தலாம்

நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம். வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக, https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.htmlஎன்ற இணையதளம் வழியாக செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.

ஈ.சி.எஸ். / ஆர்.டி.ஜி.எஸ். / என்.இ.எப்.டி. மூலமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலகம் கிளை, சென்னை - 600 009 என்ற முகவரியில் உள்ள சேமிப்புக் கணக்கு எண் 117201000000070, ஐ.எப்.எஸ். கோடு IOBA0001172, எம்.ஐ.சி.ஆர். கோடு 600020061, சி.எம்.பி.ஆர்.எப். பான் AAAGC0038F என்ற வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பலாம்.

செயலிகள் மூலமும் அனுப்பலாம்

மேலும், யு.பி.ஐ. - வி.பி.ஏ. ஐ.டி: tncmprf@iob மற்றும் போன்-பே, கூகுள்-பே, பேடிஎம்., அமேசான்-பே, மோபிகுவிக் போன்ற பல்வேறு செயலிகள் மூலமும் பணம் அனுப்பலாம். மேற்கண்ட ஈ.சி.எஸ். மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினை பெற ஏதுவாக, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்களது முழுமையான முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி /அலைபேசி எண் ஆகிய தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிவாரண நிதி வழங்கும் வெளிநாடுவாழ் மக்கள் IOBAINBB001 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை என்ற ‘சிவிப்ட் கோட்’டினை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரசீது அனுப்பப்படும்

மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, ‘அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா’ என்ற முகவரிக்கும், jscmprf@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

தற்போதைய நோய் தொற்று நிலையில், நேரிடையாக முதல்-அமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும். எனினும், ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

கொரோனாவுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்

மேற்கூறிய முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பின்கீழ் கொரோனா நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் வங்கிக்கணக்கில் செலுத்தலாம். அதாவது, ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலகம் கிளை, சென்னை - 600 009, சேமிப்புக் கணக்கு எண் 117201000017908, ஐ.எப்.எஸ்.சி. கோடு IOBA0001172’ என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

இந்த நன்கொடைகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்படும் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story