மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் பாதுகாக்கப்படும்


மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் பாதுகாக்கப்படும்
x
தினத்தந்தி 12 May 2021 3:55 AM GMT (Updated: 12 May 2021 3:55 AM GMT)

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர், ‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் பாதுகாக்கப்படும்’ என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதிபட கூறினார்.

சென்னை, 

மராட்டிய மாநிலத்தில் ‘மராத்தா’ சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்ட தனி உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து நேரிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திரா சஹானி தீர்ப்பு அடிப்படையில்...

தமிழகத்தை பொறுத்தவரை நமக்குள்ள ஒரே ஆயுதம், இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் நமது 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனவே ஒரு மாபெரும் சட்ட பாதுகாப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இந்திரா சஹானி தீர்ப்பு அடிப்படையில் தான், மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் அடிப்படையில் தான் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருக்கிறது.

நமது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று உரிய அங்கீகாரம் பெறப்பட்டு அது அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் எப்படி வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் சேர்த்துள்ளோம். மேற்கொண்டு இந்த இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின் நிச்சயம் காப்பாற்றுவார்

அதனைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு பிரச்சினை வராது என்று உறுதி அளிக்கமுடியுமா?

பதில்:- எங்களால் எந்த பாதிப்பும் வராது. அதை பாதுகாக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம். அதை நிச்சயம் அவர் காப்பாற்றுவார்.

7 பேர் விடுதலையில் நல்ல முடிவு

கேள்வி:- பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்படும்?

பதில்:- அந்த கோரிக்கை குறித்து விரைவில் நல்ல முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார். 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் முடிவு. தேர்தல் அறிக்கையிலேயே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேற்கண்டவாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதில் அளித்தார்.

Next Story