ராஜீவ் காந்தி கொலை வழக்கு:கொரோனாவால் முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மரணம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கு:கொரோனாவால் முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மரணம்
x
தினத்தந்தி 12 May 2021 7:58 AM GMT (Updated: 12 May 2021 8:13 AM GMT)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.

சென்னை

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்( வயது 72) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கு விசாரணைக்காக நன்கு அறியப்பட்டவர். அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற சிபிஐ பிரிவில் பணியில் சேர்ந்தார். சிபிஐ அதிகாரியாக பணியாற்றிய ரகோத்தமன் பொருளாதார குற்றங்கள் , வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளை விசாரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ குழுவில் ரகோத்தமன் இடம்பெற்றிருந்தார். இவர் பின்னாளில், `ராஜீவ் காந்தி கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ என்று ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக புத்தகம் எழுதினார். சிபிஐயில் எஸ்.பி-யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ரகோத்தமன் அவ்வப்போது, தொலைக்காட்சி ஊடகங்களில் நடக்கும் விவாதங்களிலும் பங்கேற்று கருத்து தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி  காலமானார்.

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Next Story