கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை


கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை
x
தினத்தந்தி 12 May 2021 10:39 PM GMT (Updated: 12 May 2021 10:39 PM GMT)

கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை நடிகர் சிவகுமார் வேண்டுகோள்.

சென்னை, 

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலினை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் நேற்று சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

பின்னர் நிருபர்களுக்கு நடிகர் சிவகுமார் அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றி ஆக வேண்டும். அதற்காக அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும். அந்த வகையில் எங்களால் முடிந்த சின்னத்தொகை ஒரு கோடி ரூபாயை அரசுக்கு அளித்துள்ளோம். நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள். மக்களும் ஆரோக்கியமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பைப் பற்றி கூற வேண்டுமென்றால், அவரது தந்தையையே 30 அல்லது 40 ஆண்டுகளாக சந்தித்திருக்கிறேன். அவரது அரசியல் வாரிசை முதன் முதலாக சந்திக்கிறேன். இது சந்தோஷமான விஷயம். தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை அளிக்க வேண்டும். தமிழ் காப்பாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story