மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு


மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 12 May 2021 11:19 PM GMT (Updated: 12 May 2021 11:19 PM GMT)

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா எதிர்ப்பு போரில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று (நேற்று முன்தினம்) நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று (நேற்று) இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு. அதையே தற்போதைய அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக நர்சு தினம் கொண்டாடப்படும் நிலையில், குடும்பங்களை மறந்து, தியாகங்களை சுமந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனா எதிர்ப்பு போரில் ஈடுபட்டுள்ள நர்சுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story