சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபம் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பலி


சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபம் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 May 2021 4:05 AM GMT (Updated: 13 May 2021 4:05 AM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் வேன்களிலேயே நோயாளிகள் உயிர் பிரிந்தது.

சென்னை, 

கொரோனா 2-வது அலை தமிழகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகிறார்கள். சென்னையில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அன்றாடம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், சிறப்பு மையங்கள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ரெயில்களில் டிக்கெட் முன்பதிவின்போது காத்திருப்போர் பட்டியலில் காத்திருப்பது போல, ஆஸ்பத்திரி வளாகத்திலேயே படுக்கைகளுக்காக காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது. படுக்கைகள் கிடைக்காததால் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கின்றன. ஒரு படுக்கையாவது கிடைக்காதா? என்று ஏழை-பணக்காரன் வித்தியாசமின்றி அனைவருமே காத்துக்கிடக்கும் நிலையே நீடிக்கிறது.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வு

குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கொரோனாவுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் இடம்போல தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறார்கள். அந்தளவு ஆம்புலன்சுகள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியையே சுற்றி சுற்றி வருகின்றன.

ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிள் கூட நிற்க முடியாத அளவுக்கு ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆம்புலன்சில் இருந்து சிகிச்சை பெறும் வார்டுக்கு செல்லவே நோயாளிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. அந்தளவு கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து இருக்கிறது.

ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் வரை நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவது ஆம்புலன்சில் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களே. இதனாலேயே ஆம்புலன்சுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் என்ற ஒன்று தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கிறது. அதேவேளை சிலிண்டரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ அல்லது திடீரென்று நின்றுவிட்டாலோ நிச்சயம் அது நோயாளிகளின் உயிரை காவு வாங்கியும் விடுகிறது.

வட மாநிலங்களில் ஏன் தமிழகத்திலேயே பல மாவட்டங்களில் இதுபோல ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரை பறிகொடுத்து இருக்கிறார்கள். ஆஸ்பத்திரிகளிலேயே இடம் இல்லாமல் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி நமது மனதை கணக்க செய்திருக்கின்றன. அப்படி ஒரு சோக சம்பவம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று அரங்கேறியது.

6 பேர் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஏராளமான ஆம்புலன்சுகள் குவிந்திருந்தன. ஆம்புலன்சுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் நோயாளிகள் சுவாசித்து கொண்டிருந்தனர். எப்படியாவது ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்தில் உறவினர்களும் தவிப்புடன் இருந்தனர். இந்தநிலையில் அதில் சில ஆம்புலன்சுகளில் சிலிண்டர்களில் இருந்த ஆக்சிஜன் திடீரென தீர்ந்து போனது. இதனால் சுவாசம் தடைபட்டு கொரோனா நோயாளிகள் மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியாளர்களும், மருத்துவ பணியாளர்களும் நோயாளிகளை காப்பாற்ற தொடர்ந்து போராடினர். ஆனால் நேற்று துரதிருஷ்டவசமாக முதலில் 4 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து 6 மணிக்கு மேல் மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் உயிரிழந்த தகவல் அறிந்து உறவினர்கள் துடித்து கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் அழுகுரலால் நிரம்பியது.

சோகத்தின் உச்சம்

இதையடுத்து அவர்களது உடல்கள் அதே ஆம்புலன்ஸ் மூலமே அவரவர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் நோயாளிகளை அழைத்து வந்த உறவினர்கள், சோகமே உருவாக அதே ஆம்புலன்சில் அவர்களது உடலை கொண்டு சென்றது அனைவரையும் சோகத்தில் மூழ்க செய்தது.

இதையடுத்து இறந்தவர்கள் யார்? யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?. அவர்கள் மூலம், தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

‘என்னதான் காசு, பணம் இருந்தாலும், ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை. சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தும், பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதே உயிர் காக்கும் ஒரே தீர்வு’ என்பதை உணர்த்துவதாகவே இந்த காட்சிகள் மாறி போனதே சோகத்தில் உச்சம்.

Next Story